Tuesday, January 27, 2009

சுற்றுலா

பொதுவாகவே சுற்றுலா என்றவுடன் மனம் தன்னாலே துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில் சுற்றுலா மனதிற்கு ஒரு மலர்ச்சியும் புதிய எண்ணங்களையும் தரக்கூடிய ஒன்று. அரசாட்சிக் காலத்திலும் சரி, முடியாட்சிக் காலத்திலும் சரி ஆட்சியாளர்களும், ஏன் அடித்தட்டு மக்களும் தங்களை புதிப்பித்துக்கொள்ள பயணங்கள் ஒரு இனிய வாய்ப்பாகவே அமைந்து வந்திருக்கிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பது தமிழ் மூதாட்டியின் சிறப்பானதொரு அறிவுரை. திரை கடல் ஓடாவிட்டாலும், புதியதொரு சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்களை உரிய மற்றுமொரு இடத்திற்கு செல்வது கூட புதிய அனுபவத்தை தரக்கூடிய ஒன்று.

அப்படிப்பட்ட சுற்றுலாவிற்கு குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினராகிய நாங்களும் சென்று வந்துள்ளோம். ஆம் தமிழ் மண்ணின் மலர்ச்சிமிகு பசுமை பூமியான கொடைக்கானலுக்கு சென்றோம். பசுமையின் அழகினை இரசித்த அதே வேளையில் இறைவனின் அருளையும் பெற தவறவில்லை. மதிய வேளையில், நீண்ட நாட்களாக நிலவி வந்த பணிமூட்டமிகு சூழல் திங்கட்கிழமையான இன்று இல்லாமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி திருப்பலியில் அனைவரும் பங்கு கொண்டோம். திருப்பலி நிறைவேறிய பின்னர், முன் தினம் இளையோரே சமைத்த சுவைமிகு உணவை உண்டோம்.


மாலை ஆறு மணியளவில், அனைவரும் ஊருக்கு திரும்ப ஆயாத்தமாகிய தருணத்தில் அதுவரை வெளி வராத பனி மூட்டம் வந்தது, எங்களை வாழ்த்தி வழி அனுப்புவதாக அமைந்தது.


படங்கள்:

Thursday, January 15, 2009

பசுமைப் புரட்சி

காலம் மாறுகிறது, மனிதனின் நல்ல குணங்களும் தேய்ந்து வருகின்றது. இயற்கையை அளவுக்கு மீறி அழித்ததின் விளைவை இன்று "மாசுபட்ட காற்று, வறண்ட நிலம் மற்றும் நீரில்லா நீர் நிலைகள்" என சந்தித்து வருகின்றோம். ஏதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் குளம் வெட்டி நீர் தேக்கினர், வாய்க்கால்கள் வெட்டி நீர் பாய்ச்சினர் மற்றும் பயணிகளுக்காக பொது நல நோக்கத்தோடு மரம் பல நட்டனர். ஆனால் நாம் இன்று சாளரம், கதவு என தனது தேவைகளுக்காக அழித்து வருகின்றோமே தவிர பெரும்பாலும் மரங்களையும் இயற்கையையும் பேணி காக்க முன் வருவதில்லை.

அத்தகையதொரு குறையை நீக்க புதிய புதிய சமூக அக்கறையுள்ள திட்டங்களை தீட்டி சிறப்பாக செயலாற்றி வரும் குழந்தை யேசு இளையோர் இயக்கத்தினர் புயலென புறப்பட்டு தமிழ்ப்புத்தாண்டில் அருமையானதொரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். தீர்மானத்தின் சாராம்சம் இதோ

  • முதற்கட்டமாக மரக்கன்றுகளை விலைக்கு வாங்கி ஆலயத்தில் இருப்பு வைப்பது.
  • யாரேனும் தங்கள் தெருக்களில் நடவேண்டும் என கேட்டால் இலவசமாக வழங்குவது.
  • தங்களால் நட இயலவில்லையெனில் இளையோர் இயக்கத்தினரே மரம்நடுவதில் உதவி செய்வது.
இயற்கையை பேணி காப்பதில் அக்கறை கொண்ட பங்கு மக்களில் சிலர் இளையோர் இயக்கத்தினரை தொடர்புகொண்டு மரக்கன்றுகளை பெற்று சென்றுள்ளனர். அது தவிர சாந்தி நகர் 22 வது தெருவில் அரசாங்கத்தால் வைக்கப்பட்டு காய்ந்து போன மரக்கன்று ஒன்று காணப்பட்டு அதிலே நமது மரக்கன்றை வைத்து பாதுகாப்போம் என தீர்மானிக்கப்பட்டது. இளையோர் இயக்கத்தினரால் புதிய மரக்கன்று ஒன்று இன்று நடப்பட்டது. இளையோரின் செயல்பாட்டை ஆதரித்து உற்சாகப்படுத்தும் வண்ணம் வான் மழை தூரி வாழ்த்து தெரிவித்தது இளையோருக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தை யேசுவின் அருளாசீரோடு நிச்சயம் மேலும் பல சாதனைகள் புரிவோம்.

மரம் நடும் இளையோர்:
ஜெரால்ட், லால், அலெக்சாண்டர், ஜோயல், இக்னேசியஸ் & ராஜதுரை

Wednesday, January 14, 2009

பெருநாள்

தமிழர் புத்தாண்டாம் தை முதல் நாளில் குழந்தை யேசுவின் திருநாளும் அமைந்தது சாந்தி நகர் பங்கு மக்கள் செய்த பாக்கியமே. வீரமாமுனிவர் முதல் பல கிறீத்தவர்கள் தமிழுக்கு அருந்தொண்டாற்றியவர்களே. அவர் இயற்றிய தேம்பாவாணி பெயரை சார்ந்திருக்கும் தோட்டத்தின் அருகே இருக்கும் நமக்குள் தமிழ் பற்று இருப்பதில் வியப்பேதுமில்லை.

இத்தகையதொரு நாளில் ஆயர் ஜூட் பால்ராஜ் ஆண்டகை தலைமையில் நடந்த பெருவிழாவில் ஏறத்தாழ 4000 க்கும் மேற்ப்பட்டோர் அற்புத குழந்தை யேசுவின் அருளை பெற்றுச்சென்றனர். ஆயர் அவர்கள் பிரசங்கம் வைத்தாலே நாம் அறியாத பல விசயங்களை அறியச்செய்யும் வகையில் எடுத்துரைப்பார். அந்த வகையில் புது நன்மை வாங்கும் குழந்தைகளும் இறைவனின் அருட்கொடைகளைப்பற்றி அறியும் வண்ணம் கேள்விகள் கேட்டு விளக்கம் அளித்தது நிச்சயம் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

திருநாள் திருப்பலி நிறைவேறியதும் இளையோர் இயக்கத்தினர் பங்கு தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளாருடன் புகைப்படம் எடுத்துகொண்டோம்.

மாலையில் இறை ஆசீருடன் கொடியிரக்கமும், அதனைத்தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா நமது திருநேல்வேலி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் திரு. தனுஸ்கோடி ஆதித்தன் அவர்கள் தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்புரையாற்றிய முனைவர் திரு. வளனரசு அவர்கள் தமிழ் மழையில் அனைவரையும் நனைய வைத்தார்கள். குறிப்பாக "சங்கின் வகைகள் பற்றியும் அதனை தேம்பாவணியில் வீரமாமுனிவர் அன்னை மரியாளைப்பற்றி எடுத்துரைப்பதற்காக எங்ஙனம் பயன்படுத்தியிருக்கிறார்" எனவும் எடுத்துரைத்தது விழாவிற்கு மேலும் மெருகூட்டியது.

திருநாட்களில் உற்சாகமாக செயலாற்றிய இளையோரை அனைவரும் ஊக்கப்படுத்த தவறவில்லை. வரும் ஆண்டு திருநாட்களில் எதை எதை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும் ஏன இளையோர் இயக்கத்தினர் அனைவரும் கூடி இப்போதே திட்டங்கள் தீட்டியது நிச்சயம் மாற்றத்திற்கான அறிகுறி என்றுதான் சொல்லவேண்டும்.

படம்:

பங்குத்தந்தையுடன் இளையோர் இயக்கத்தினர்.
.

Tuesday, January 13, 2009

தேரில் வரும் தெய்வம்

அற்புத குழந்தை யேசு திருத்தலத்தின் ஒன்பதாவது திருநாளாகிய இன்று திருப்பலி நிறைவேறிய உடன் சப்பரப்பவனி நடைபெற்றது. இளையோர் இயக்கத்தின் சிறப்பான வழி நடத்துதலில் குறிப்பிட்ட நேரத்தில் சப்பரம் ஆலயத்தில் இருந்து சாந்திநகரின் தெருக்கள் வழியாக அருளாசீரை பொழிந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

இந்த அருமையானதொரு நாளில் குழந்தை யேசு இளையோர் இயக்கத்தினரும் மற்றும் பலரும், தற்போதைய சூழலில் மோட்டார் வாகனத்தில்(Open type Jeep) பவனியாக கொண்டு செல்லப்படும் குழந்தை யேசுவின் திருவுருவம் தோள்களில் கொண்டு செல்லப்படுமாறு மாற்றியமைக்க வேண்டும் என தங்களின் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். நிச்சயம் இது நல்ல நோக்கம் தான், ஏனெனில் இறைவனை நம் தோள்களில் தூக்கிச்செல்லும் போது பக்தி இன்னும் அதிகரிக்கின்றது.

படங்கள் :
குழந்தை யேசுவின் திருவுருவம் & திருவுருவப்பவனியின் போது


Sunday, January 11, 2009

உடல் பலமும் மன மகிழ்வும் இறைவார்த்தையில் நிலைக்க!

போட்டிகள்:
இறைய தினம் நமது நமது அற்புதர் குழந்தை இயேசுவின் ஆலய வளாகத்தில் காலை முதல் மாலை வரை சிறுவருக்கான போட்டிகளில் ஆரம்பித்து முதியவர்களுக்கான போட்டிகள் வரை அனைத்துவிதமான போட்டிகளும் நடைபெற்றது. குறிப்பாக சிறுவர்களுக்கான சாக்கு ஓட்டம், செங்கல் மேல் ஓட்டம், நீளம் தாண்டுதல், மிதிவண்டி மேது ஓட்டம் , பெண்களுக்கான ஊசியில் நூல் கோர்த்தல், மெழுகு திரி ஏற்றுதல், இளைஞர்களுக்கான மட்டைப்பந்து போட்டி மற்றும் இளைஞர்கள், திருமணமான ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி ஆகியவை இனிதே நடைபெற்றன.

திருப்பலி:
மறை மாவட்ட போருல்லாளர் தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் தந்தை ஸ்டாலின் அடிகளாரின் கருத்தாழமிக்க மறையுரையான "தீக்குச்சி மற்றும் மெழுகுவர்த்தி போல் தன்னலம் கருதாத பிறர் நலம் கொண்ட வாழ்க்கை வாழ குழந்தை இயேசு நம்மை அழைக்கிறார்" நிச்சயம் மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கலை
நிகழ்ச்சிகள்:
விழாக்களும் போட்டிகளும் பங்குமக்கள் தங்களின் பங்களிப்பையும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தோடு சமூக வாழ்க்கைக்கு இவையும் இன்றியமையாதது என்ற குறிக்கோளுடன்தான் ஏற்படுத்தப்படிருக்கிறது. அந்த வகையில் திருப்பலிக்குப்பின் நமது மறைமாவட்ட கலைக் குழுவினரான பொருநை கலைக்குழுவினரின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

படங்கள் :
செங்கல் மேல் ஓட்டம் & வெற்றிபெற்ற மட்டைபந்து அணியினர்

Saturday, January 10, 2009

திருநாளில் ஒரு(6) நாள்

சாந்தி நகர் அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தின் ஆறாவது நாளான இன்று, பக்தர்கள் குழந்தை இயேசுவின் அருளைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்ற அதே வேளையில் இளைஞர்கள் மகிழ்ச்சியோடும், முகமலர்ச்சியோடும் சென்றனர். காரணம் இன்று நடந்த போட்டிதான். திருநாளின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டிகள் நடந்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் பங்குகொள்ளும் வகையில் இந்த போட்டிகள் உள்ளன.

அந்த வகையில் இன்று இளைஞர்களுக்கும், திருமணமான ஆண்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. இளைஞர்கள் செல்வன் அலெக்சாண்டர் தலைமையில் கலந்துகொண்டனர். பங்கு மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டிகளுள் கயிறு இழுக்கும் போட்டியும் ஒன்று. அனைவரின் எதிப்பார்ப்புக்கிடையே இளைஞர்கள் இரு வாய்ப்புகளிலும் வென்று பரிசை தட்டிச்சென்றனர்.

Monday, January 5, 2009

ஏற்றம்!

நமது சாந்திநகர் குழந்தை இயேசு ஆலயத்தில் திருவிழா தொடங்கியதன் அடையாளமாக இன்று இனிதே கொடியேற்றப்பட்டது. நமது மறைமாவட்டத்தின் முதன்மை குரு தலைமை தாங்க, தந்தையர்கள் பலர் வந்து வாழ்த்த, பங்கு மக்களின் மகிழ்ச்சி நிறைந்த ஆரவாரத்தோடு அற்ப்புத குழந்தை இயேசுவின் கொடி ஏற்றப்பட்டது.

"கொடியைப்போல் மக்கள் மனமும் இறைவனை நோக்கி உயர வேண்டும்" என்ற சரியானதொரு கருத்துடன், தமிழர் தம் பண்பாட்டின்படி திருவிழாவின் முதல் நாலான இன்று திருப்பலியில் குத்து விளக்கு ஏற்றப்பட்டது. ஒவ்வொரு பக்த சபையின் சார்பாகவும் ஒருவர் வந்து விளக்கேற்றினார். இளைஞர் இயக்கத்தின் சார்பாக செல்வன் மேரி லால் விளக்கில் ஒளி ஏற்றினார். குழந்தை இயேசு வழிபாடு தொடங்கப்பட்ட கால வரலாற்றையும், வாழ்விற்கு தேவையானதொரு மறையுரையுடன் திருப்பலி இனிதே நிறைவு பெற்றது.

Friday, January 2, 2009

பரிசுகள்!

நமது சாந்தி நகர் பங்கு மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பரிசு குலுக்கல் இந்த வருடத்தின் முதல் நாள் இனிதே நடைபெற்றது. இளையோர் இயக்கத்தினருக்கு இந்த நாள் ஊக்கம் தரும் நாளாக அமைந்தது. ஏனெனில் போதுமான அளவில் பரிசுச்சீட்டுகள் விநியோகித்து இருந்தாலும், பலரும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர். அடுத்த ஆண்டுக்கான பரிசு குலுக்கலுக்கு நிச்சயம் அதிக அளவில் பரிசுச்சீட்டுக்கள் விநியோகிக்கவேண்டும் என்ற மக்களின் ஆர்வத்துடன் பரிசு குலுக்கல் தொடங்கியது.

பங்குத்தந்தை ரெக்ஸ் ஜஸ்டின் அடிகளார் வாழ்த்துரை வழங்க பரிசு குலுக்கல் ஆரம்பமானது. ஒவ்வொரு ஐம்பது பரிசுக்கிடயேயும் ஒவ்வொரு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளையோர் நடத்திய நாடகம் அனைவரின் கவனத்தையும் கருத்தையும் ஈர்த்தது. அதிலும் குறிப்பாக வித்தியாசமான முறையில் நாடகத்துக்கு இடையே வந்த நடனம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. கலந்து கொள்ளும் பங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு மட்டுமல்லாமல் இளைஞர் இயக்கத்தின் சிறப்பான செயல்பாடுகளில் கலந்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் அதிகரித்து வருவது நமது பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

Thursday, January 1, 2009

பிறந்தது புத்தாண்டு!

துன்பங்களும், துயரங்களும் அதனோடுகூட இன்பங்களும் சந்தித்த 2008 முடிந்து மாபெரும் எதிர்பார்ப்புடன் பிறந்திருக்கிறது புத்தாண்டு!

இப்புத்தாண்டின் எதிர்பார்ப்பென்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான எதிர்ப்பார்ப்பிருக்கும். அந்த எதிர்ப்பார்ப்பு நமக்கு மட்டும் நல்லதானதா? அல்லது எல்லோருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியதா?! என்பதனை சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வாண்டில் எல்லோரும் எதிர் நோக்குவது என்னவென்று பார்த்தால், இவ்வாண்டின் மத்தியில் அடுத்து ஆளப்போகி நடுவண் அரசை தேர்ந்தெடுக்கப்போகின்றோம், மிகுந்த வருத்தத்தோடு & என்னதான் நடக்கிறது என்ற குழப்பத்தோடு எதிர்ப்பார்க்கும் இலங்கை வாழ் தமிழர்களின் நிலை மகிழ்ச்சிக்குரியதாக மாற வேண்டும் போன்ற பெரிய பொதுவான நோக்கங்களோடு,

பருவம் தவறா நல்ல மழை, நோய் நொடியில்லா சூழல், கோபமில்லா மனப்பக்குவம், வேற்றுமையிலும் ஒற்றுமை, ஆயுதம் ஏந்தாத உள்ளம், இறை பக்தியோடு கூடிய செயல்பாடுகள் யாவும் பெற குழந்தை இயேசு துணை வேண்டுவோம்.

இப்புத்தாண்டில் உறுதிமொழிகளோடு அல்ல;
உறுதியான சிறந்த செயல்பாடுகளின் வழி நடப்போம்!