Wednesday, February 25, 2009

தவக்காலம்

தவம் என்றாலே ஒறுத்தல், ஒறுத்தல் என்பது தேவைக்கு அதிகமாக உள்ளதை பிறர்க்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தியாவசியமில்லாததை தவிர்த்தல். இப்படிப்பட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தும் ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இன்றைய சுயநலமிக்க அவசரமிகு உலகில் தனது தேவைகளுக்காகவும், வாழ்வுக்காகவும் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

"மண்ணாகப் பிறந்த நீ
மண்ணுக்கே திரும்புவாய்"

என்ற அருமையான பாடல் வரிகள் வாழ்வின் உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றது. நன்கு வளமிக்க மண்ணில் வளரும் பயிர்கள் செழிப்பான அறுவடையை கொடுக்கும். ஆனால் வளமில்லாத மண்ணோ ஒன்றுக்கும் உதவாது. அதனை மேம்படுத்த அதில் உரங்களை போட்டு உழுது பண்படுத்த வேண்டும். ஆம் நமது துன்பங்களை நீக்கும் வழிகளையும், நம்மை மனித நேயமிக்க மனிதனாக மாற்றவும், நம்மை புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்புகள் தேவைப்படுகின்றது. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் காலமாக இந்த தவக்காலம் அமைகின்றது.

இளைஞர்களாகிய நாமும் நம்மால் இயன்ற நற் காரியங்களையும், நமது வாழ்வு இறைவனின் பாதையில் செல்கின்றதா? என்பதனையும் பரிசீலனைக்கு உட்படுத்த இது தான் சரியான வேளை.

Monday, February 9, 2009

திருத்தந்தையின் மனக்கவலை

கடந்த பல மாதங்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் கேட்டும், உணர்ந்தும் மனக்கவலைப்பட்ட நிகழ்வு ஒன்று உண்டென்றால்; அது ஈழத்தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. இலங்கையில் பாதிக்கப்படுபவர்களை சக தமிழன் என்று நாம் எண்ணி கவலை கொண்டாலும்; பிறருக்கும், இந்த உலகுக்கும் அவர்களை மனித குலத்தைச் சார்ந்த ஒரு கூட்டம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து கவலை கொண்டு, பாதிக்கப்படுபவர்களுக்கு பாரபட்ச்சமின்றி உதவ கட்டாய கடமை உள்ளது.

"ஒருவன் தன் மொழி சார்ந்து, தனது பாரம்பரியத்தோடு வாழும்போதுதான் மனித வாழ்வு மேன்மையடைகிறது." என்ற கருத்தில் தான்; தமிழ்த் தொண்டாற்றி இறை அருள் பெற்றுத்தந்து மனிதருள் புனிதரானார் புனித வீரமாமுனிவர். அத்தகையதொரு கலாசாரத்தின் பிரதிபலிப்போடு ஆண்டவர் இயேசு கிறித்துவின் அருளைப்பெற்று வரும் நமக்கு, அவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் அது மனம் உணர்ந்து கொள்வதில் வியப்பேதுமில்லை.

ஈழத்தில் பாதிக்கப்படும் மக்கள் குறித்து பல மாதங்களாக தனது கவலைகளை தெரிவித்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி வரும் திருத்தந்தை அவர்கள், கடந்த வாரத்தில் இலங்கையில் பாதிக்கப்படும் மக்களின் நிலை அறிந்து கொள்ள வத்திக்கான் தூதுவர் அதி.வண.மரியா செனாரி ஆண்டகை அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கே வாடும் தமிழர்களுக்காக நமது கத்தோலிக்க கிறித்தவர்கள் 08/02/09 ஞாயிறு அன்று தமிழகமெங்கும் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தி தமது சமூக அக்கறையையும், மனக் குமுறலையும் வெளிப்படுத்தினர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மயிலை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

இராணுவம் தமிழ் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு பகுதிகளிலும், மருத்துவமனை, தேவாலயம் ஆகியவற்றின் மீதும் குண்டுகள் வீசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறியும் அரச தலைவர் ராஜபக்சவும் மற்றவர்களும் கேட்கவில்லை.

சிறு குழந்தைகள், பெண்கள், வியாதி வந்தவர்கள் என நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்பதை ஒரு சாக்காக வைத்து தமிழ் மக்களை அழிக்க நினைக்கின்றனர். அங்கு தமிழ் மக்கள் உரிமையோடும், மனித மாண்போடும் வாழ போர் நிறுத்தம் செய்து அரசியல் ரீதியான தீர்வு கண்டால் மட்டும் போதாது. தமிழர்களுக்கு தனிப்பட்ட இடம் கொடுக்க வேண்டும்.

தனி ஈழம் அமைந்தால்தான் தமிழர்களை காப்பாற்ற முடியும்.

மிகச்சிறிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்காக ஒரு சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்துள்ளது. இதனால் இலங்கையில் மக்களின் தனித்தன்மை, தேவைக்கு ஏற்ப தமிழீழம் கொடுக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் சீராக கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.