Monday, March 21, 2011

அன்பின் காலம்

வேகமான வாழ்க்கையில், வருடங்கள் நிமிடங்களாக மறைகின்றது. சற்றே பின் நோக்கி பார்த்தோமானால் மட்டுமே இவ்வளவு தொலைவு கடந்திருக்கிறோம் என்பதை உணர முடியும். ஆனால் அதற்கான நேரங்கள் நம்மிடையே எந்த அளவுக்கு இருக்கிறது அல்லது அதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறோமா என எண்ணியது உண்டா?

தற்போது அதற்கான அவசியம் ஏது?

எந்த ஒரு நாடும், தனி மனிதனும், வெற்றியாளனும் தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் வெற்றிக்கு முந்தைய நிலையை என்றும் நினைவில் கொண்டாக வேண்டும். அப்பொழுதுதான் தாம் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கை என்றும் இருக்கும்.

சரி இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் கள்ள கபடமற்ற நல் உள்ளமும், வழிப்போக்கர்க்கெல்லாம் அன்போடு உணவழித்த வரலாறைக் கொண்ட தமிழர்களாகிய நாம்  இன்று எந்த நிலையில் இருக்கிறோம்?

தேவையற்ற பொழுதுபோக்கிற்கும், நேர நிர்வாகமின்மையாலும் காலங்களை வீணாக்கும் நாம், அன்பு செலுத்துவதற்கு நேரத்தை ஒதுக்குகிறோமா? அப்படியே ஒதுக்கினாலும் அது சந்தேகத்திற்கிடமில்லாமல் இருக்கிறதா? இல்லையேல் உள்ளே வெறுப்பும், வெளியே அன்புமாக வெறுமையுற்று இருக்கின்றதா நம் வாழ்வு?

இக்காலம் தவத்தின் காலம், மன்னிப்பின் காலம். நாம் சற்றே சிந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில் எளியோரிடமும், நோயுற்றவர்களிடமும் எந்த அளவுக்கு அன்பு செலுத்தியிருக்கிறோம். இவர்கள் யாவரையும் விட நம்மோடிருக்கும் முதியவர்களுக்கென நாம் நேரம் ஒதுக்கியிருக்கிறோமா? நம் அருகிலிருப்போரிடம் அக்கறை கொண்டிருக்கிறோமா?
என நம்மை மறு ஆய்வுக்கு உட்படுத்தினால் நிச்சயம் விடை கிடைக்கும்.