Saturday, November 21, 2009

ஊடகங்களின் வளர்ச்சி - இளையோர் வாழ்வில் எழுச்சியா? தளர்ச்சியா?

சமுதாயத்தின் வளர்ச்சி என்பது இன்றைய காலக்கட்டத்தில் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியை சார்ந்ததாகவோ அல்லது அதனை மையமாக வைத்தோ தான் இருக்கின்றது. தொடர்புச்சாதனங்கள் தான் பல வித புதுத்தொழில்நுட்பங்களுக்கும், புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அடி நாதமாக விளங்குகின்றது. தந்தியில் ஆரம்பித்து, தொலைபேசி, அலைபேசி, ப்ளூடூத், சென்சார் என இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் செயற்கைக்கோள், டிவி, ரேடார், ரோபோ, இராணுவம், சினிமா, இணையம் என மனிதனின் பொழுதுபோக்கு, ஆடம்பர பொருட்கள் அமைந்துள்ளது.

ஒரு காலக்கட்டத்தில் புறா, நம்பிக்கைகுரிய நபர்கள் என ஒருவரிடமிருந்து மற்றவருக்கு உறுதியாக சென்றடைந்து விடும் என்ற உறுதித்தன்மையில்லாமல் தகவல்கள் பரிமாறப்பட்டன. ஆனால் இன்று அடுத்த நொடியே நம் விருப்பங்களையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்த, அறிந்துகொள்ள நவீன தொழில் நுட்பங்கள் உதவுகிறது.

இப்படி ஒரு தனி நபரையோ, சமுதாயத்தையோ குறித்த தகவல்கள், வாழ்க்கைமுறைகள் படிப்படியாக ஏனைய நபராலோ, சமுதாயத்தாலோ பின்பற்றப்பட்டு தமது வாழ்வில் புதியதோர் பார்வையை கொண்டுவர ஊடகங்கள் துணைபுரிந்தன. முந்தைய காலகட்டங்களில் வளர்ச்சி என்பது நாகரீகம், பண்பாடு, குடும்ப அமைப்பு, வாழ்வியல் சூழல் என்ற பார்வையிலே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று வளர்ச்சியை எண்களால் நிர்ணயிக்கும் ஒரு மாய உலகிற்கு வந்திருக்கின்றோம்.

வளர்ச்சியை பொருளாதாரத்தால் பார்க்கும் கண்ணோட்டத்தை கொடுத்தது யார்? ஊடகங்கள். ஆம்! ஊடகங்கள் ஒரு மனிதனை மேன்மைப்படுத்தவதையோ, சிறுமைப்படுத்துவதையோ சாத்தியப்படுத்துகின்றன. ஊடகங்கள் பெரும்பாலும் ஒர் சார்புத்தன்மையாகவோ அல்லது வியாபார நோக்கோடுதான் செயல்படுகின்றன. பொது நல நோக்கோடு செயல்படும் ஊடகங்களின் எண்ணிக்கையை மொத்த ஊடகங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது வருத்தமே மிஞ்சும்.

இத்தகைய தொழில்நுட்பங்களை, ஊடகங்களை அதன் அபரிவிதமான வளர்ச்சியை பலரால் சரிவர புரிந்துகொள்ளவோ அல்லது சரிவர பயன்படுத்தவோ தெரியவில்லை. எதற்காக இந்த தொழில் நுட்பம்? எதற்காக இந்த ஊடகம்? இதனை எங்கனம் உபயோகப்படுத்தினால் நம் வாழ்வு சிறக்கும்? என்ற கோணத்தில் புரிந்துகொள்ளாமல், தனது மனதின் சிற்றின்ப ஆசைகளுக்கு அடிபணிந்து அதன் உபயோகத்தன்மையையே சிதைக்கும் ஒரு சூழல் தான் இளையோரிடம் உள்ளது.

தொலைக்காட்சி - இன்றைக்கு இந்தியாவிலே 417 அலைவரிசைகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதிலே செய்திச் சானல்கள் 70 மற்றும் உபயோகமான சானல்கள் ஏறத்தாழ 54. இது 12 விழுக்காடாகும்.
ரேடியோ - ஒரு சில சமுதாய வானொலிகளைத் தவிர ஏறக்குறைய 70 சதவிகிதத்திற்குமேல் சினிமாச் செய்திகளைத்தான் வெளியிடுகின்றன.
இதழ்கள் - இவையும் பெரும்பாலும் சினிமா, பகையுணர்வை வளர்ப்பதிலே தான் ஆர்வமாக இருக்கின்றன.

இத்தகைய ஊடகங்களை நாம் கண்ணோக்கும் பார்வை தவறா? அல்லது அவசியமில்லா அனாவசியமானவற்றை வெளியிடும் ஊடகங்கள் தவறா? என்று கேட்போமானால் இருவர் கரங்களும் மற்றொருவரையே காட்டும்.
ஒழுங்காக ஆடிப்பாடி, ஓடி விளையாடிக்கொண்டிருந்த இளையோர் இன்று ஓட்டமின்றி தொலைக்காட்சியில் வரும் ஆட்டத்தை மட்டும் பார்த்து வயிறு வளர்க்கின்றனர். விளையாடும் ஆர்வமும், உடல் திறனும் வலுவிலக்க யார் காரணம்? வீணான நேரத்தை போக்க வந்த ஊடகங்கள் இன்று இளையோரின் நேரத்தை வீணாக்குவதில் முதலிடம் வகுப்பது எதனால்? நம்மில் பலர் கேட்கலாம் சரியானவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாமே என்று!

சுவையான உணவு, சுவையில்லா ஆரோக்கிய உணவு இரண்டையும் நம் முன் வைத்தால், பலரது விருப்பம் சுவையான உணவாகத்தான் இருக்கும். ஏனெனில் நம் உடல்தான் ஆரோக்கியமாக இருக்கிறதே! என்ற எண்ணம் நம் மனதில் மேலோங்கி அதன் பேரில் விருப்பம் கொள்ள வைக்கின்றது. ஊடகங்களில் நல்ல விடயங்களும் இருக்கிறதே! என்போமானால் அது இதனைப்போலத்தான் இருக்கும்.

கற்றுக்கொள்ள ஆர்வமிருக்கும் இளையோரும் மாறுபட்ட தகவல்கள் மற்றும் வியாபார நோக்கங்களோடு வெளியிடும் ஊடகங்களால் ஒரு குழப்ப நிலைக்கு ஆளாகின்றனர். எது சரி? என்று தேர்ந்தெடுப்பதில் ஆரம்பிக்கும் குழப்பம், சோம்பேறித்தனம், உழைப்பின்மை, சோர்வு என யாவும் சேர்ந்து இறுதியில் திறனற்றவனாக மாற்றிவிடுகின்றது. இன்றைக்கு பெரும்பாலான பெற்றோர்கள் தனது மகன்/மகள் கணிணியில் அதிக நேரத்தை செலவழிக்கிறான்/ள், தொலைக்காட்சியில் அதிக நேரத்தை வீணாக்குகின்றான்/ள் என புலம்புவதை நம்மில் அனைவரும் உணர்ந்திருப்போம்.

ஊடகங்கள் இல்லாக் காலத்தில் இதனை விட மாண்போடு இளைஞன் இருந்தான். நாட்டிற்காக உழக்கவேண்டும், வீரத்தை நிலை நாட்ட வேண்டும், கண்டங்கள் கடந்து வியாபாரம் செய்யவேண்டும் , நல்லதோர் குடிமகனாக இருக்கவேண்டும் என எண்ணினான். இன்றும் இளையோரிடம் அச்சிந்தனை இருக்கின்றது, ஆனால் அது சுய நலம் எனும் சாயம் போர்த்தி இருக்கின்றது. இத்தகைய நிலைக்கு இளையோரை கொண்டுவந்தததில் ஊடகங்கள் தான் முன்னிலை வகிக்கின்றது.