Sunday, March 15, 2009

தியானம்

இளையோருக்கான தியானம் இன்று இனிதே நடைபெற்றது. எதிர் பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டனர். "தவறுகளிலிருந்து மீள்தல்" என்ற அருமையானதொரு கருத்தை கொண்டு தியானம் நடைபெற்றது. பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் தவறு செய்தவன் திருந்துவது என்பதே ஆச்சரியமானதாக இருக்கிறது. ஏனெனில் தவறுகளை சுட்டி காட்டி, நல் வழிப்படுத்த சரியான வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்காததும், அல்லது சரியான நபர்கள் இருந்தும் உண்மை நிலை உணராமல் அலட்சியப்படுத்துவதுமாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் நம்மை புதிப்பித்துக்கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும் என்பது உறுதியே. இது போன்ற தியானங்களில் கட்டாயம் இளையோர் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் எனில் ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நம்மை அந்த வேலையில் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவும் பயிற்சிக்குட்படுத்துகின்றனர்.

ஆனால் நாம் நமது சமூக மற்றும் ஆன்மீக வாழ்வில் நம்மை மேம்படுத்த எங்ஙனம் நம்மை பயிற்சிக்கு உட்படுத்துகின்றோம் என்று பார்த்தோமானால் கேள்விக்குறியே மிஞ்சும். அதனால் தான் நமது ஆன்மீக அமைப்பானது மாதமொருமுறை தியானம் மற்றும் சபை சார்ந்த செயல்பாடுகள் என ஆன்மீகத்தோடு சமூக வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அடித்தளம் அமைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட செயல்பாடுகளுக்குள் நம்மை உட்படுத்த நாம் தாமாகவே முன் வரவேண்டும், அதனோடு கூட பெற்றோரும் இது போன்ற தியானங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளில் கலந்துகொள்ள தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால்தான் எதிர்காலத்தில் மன்னிக்கும் மனப்பான்மையும், அன்பும், சகோதரத்துவமும் கொண்ட உண்மையான வாழ்வு வாழ முடியும்.