Sunday, August 23, 2009

வாழ்த்துவோம் !!!

இளைஞர்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு ஒன்று இனிதே நடந்தேறியுள்ளது. ஆம் அகில உலக கிறிஸ்தவ அமைப்பு (IYCS), அகில உலக கத்தோலிக்க அமைப்பு(ICO) மற்றும் அகில உலக அரசு சாரா அமைப்பு(NGO) ஆகியவற்றின் புதிய ஒருங்கிணைப்பாளராக சென்னை - மயிலை உயர் மறை மாவட்டத்தின் ஆர். ஏ. புரம் பங்கின் ஒருங்கிணைப்பாளர் தீபக் நியமிக்கப்பட்டுள்ளார். நமது தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் இத்தகைய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது நமது இளைஞர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விஷயமாகும்.

அவரை நமது இளைஞர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். பல்வேறு நாடுகளின் இளைஞர் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் அவரோடு இணைந்து, அவர் கருத்துக்களை அறிந்து செயலாற்ற நாமும் விழைவோம்.

நன்றி:
நம் வாழ்வு
23 -08 -2009

Tuesday, July 14, 2009

இளைஞனே! இருத்தலா? இயக்கமா?

நண்பா! ...
ஒரு நிமிடம்.....
இளைஞனே ! இருத்தலா? இயக்கமா? என்ன என்பதும் உன்னைப் பொறுத்ததே. இருத்தலில் இருக்கும் எந்தவொரு பொருளும் இயங்கவில்லை என்றால் வாழ்வு என்பது  சாத்தியமாகாது! அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்கள் கூட ஓர் இடம் விட்டு மற்றொரு இடம் மாறினால் மட்டுமே மனிதர்களுக்கு பயன்படும். இல்லையேல் சங்கடமாகிவிடும். இருத்தலும் இயக்கமும் நம்முடைய எண்ணத்தின் வெளிப்பாட்டிலிருந்தே உதயமாகின்றது.

இளைஞனே! உன் எண்ணத்தை தூயதாக்கு!
இலக்கை கூர்மையாக்கு!
நடையை விரைவாக்கு!
சொல்லை  செயலாக்கு!
வாடி விடும் மலர் கூட இதழ் விரித்து சிரிக்கின்றது!
வாழ்ப்பிறந்த உனக்கேன் அழுகை பிறக்கிறது?
இமைகளை பூட்டி விழிகளை சிறை வைக்காதே
பூட்டை உடைத்தெறி! நம்பிக்கை ஒளிக்கீற்று 
உன் நரம்பெல்லாம் ஊடுருவட்டும்.
மூட்டப்பூச்சிக் கூட முடங்கி இருப்பதில்லை
மூளை கொண்ட மனிதனே......... இன்னுமா அச்சம்?
நீ சும்மா இருந்தால் சுகமே உன் சுமையாகும்
 இன்று வந்த காற்று நிரந்தரமல்ல. நாளை
வரும் என்று உறுதி இல்லை - எனவே
இன்று வரும் தென்றலில் அசைந்தாடு
நாளைய சூறாவளியில் எதிர்நீச்சல் போடு 
விரைவாக உன் சிறகை விரி! வானில் தடையேதுமில்லை!
இனி உன் முயற்சிக்கு வானம் தான் எல்லை!
தூங்கிய தூக்கம் போதும்; தூக்கத்தை தூக்கி எரிந்து புறப்படு!
தூங்கும் உன் சுற்றத்தாரை நீ தூண்டிஎழுப்ப  புறப்படு!
உனக்குள்ளே உனக்குள்ளே ஓராயிரம் ஒழி கீற்றுகள்
உள்ளடக்கி உள்ளதென உணர்ந்து நீ புறப்படு! உன்
இருவிழிப் பார்வைகளின் இமைகளை நீ திறந்து பார்
இருளானது நின் விழியைக் கண்டதும் மறைந்துவிடும்
சிந்தித்துப்பார்......................
குடிசையில் வாழ்ந்தவர் தான் - முன்னாள் குடியரசு தலைவர்
குடிமகனே முயன்றால் - நீ நாளைய குடியரசு தலைவர்...
அழுது பிறந்தாய் இறந்தாலும் அழுவார்!
நண்பா - முதலும் முடிவும் அழுகை மட்டும்தான் மிச்சம் என்பதை
புரிந்துகொள்!
 
நண்பா! 
எழு விழித்திடு இலக்கு அடையும் வரை நிற்காதே!
வாழ்வின் ஓட்டத்தில் தடைகள் வந்தாலும் தகர்த்தெறி!
மீண்டும் எழுந்து ஒழி வீச - வாழ - வளர வாழ்த்துரை ஏற்க - 
வரலாறு படைக்க வீறு கொண்டெழு!
என்னத்தை படைப்பாக்க!
சமுதாயத்தைச் செம்மையாக்க!
மனிதத்தை வளமாக்க வாராய்!
இளைஞனே......... 

ஆக்கம்: திருமதி. அருள்சீலி அந்தோணி 
நன்றி: www.anbinmadal.org

Sunday, April 12, 2009

அகவிருள் அகற்ற அருளொளி பிறந்தது

உயிர்ப்பு இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. "காலங்கள் யாவும் அவருடையன" என்ற திரு வாக்கிற்கேற்ப கடந்து வந்த துன்ப காலங்களை நீக்கி உண்மையான, மகிழ்வான வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்லும் உயிருள்ள உணவாக நமக்காக தன் இன்னுயிரையே ஈந்து உயிர்த்தார்.

தவக்கால நிகழ்வுகள்:


1. புனித வியாழன் 2&3. இரத்ததான முகாம் - புனித வெள்ளி


4. உயிர்ப்பின் தயாரிப்பில்

Sunday, March 15, 2009

தியானம்

இளையோருக்கான தியானம் இன்று இனிதே நடைபெற்றது. எதிர் பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டனர். "தவறுகளிலிருந்து மீள்தல்" என்ற அருமையானதொரு கருத்தை கொண்டு தியானம் நடைபெற்றது. பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் தவறு செய்தவன் திருந்துவது என்பதே ஆச்சரியமானதாக இருக்கிறது. ஏனெனில் தவறுகளை சுட்டி காட்டி, நல் வழிப்படுத்த சரியான வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்காததும், அல்லது சரியான நபர்கள் இருந்தும் உண்மை நிலை உணராமல் அலட்சியப்படுத்துவதுமாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் நம்மை புதிப்பித்துக்கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும் என்பது உறுதியே. இது போன்ற தியானங்களில் கட்டாயம் இளையோர் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் எனில் ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நம்மை அந்த வேலையில் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவும் பயிற்சிக்குட்படுத்துகின்றனர்.

ஆனால் நாம் நமது சமூக மற்றும் ஆன்மீக வாழ்வில் நம்மை மேம்படுத்த எங்ஙனம் நம்மை பயிற்சிக்கு உட்படுத்துகின்றோம் என்று பார்த்தோமானால் கேள்விக்குறியே மிஞ்சும். அதனால் தான் நமது ஆன்மீக அமைப்பானது மாதமொருமுறை தியானம் மற்றும் சபை சார்ந்த செயல்பாடுகள் என ஆன்மீகத்தோடு சமூக வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அடித்தளம் அமைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட செயல்பாடுகளுக்குள் நம்மை உட்படுத்த நாம் தாமாகவே முன் வரவேண்டும், அதனோடு கூட பெற்றோரும் இது போன்ற தியானங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளில் கலந்துகொள்ள தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால்தான் எதிர்காலத்தில் மன்னிக்கும் மனப்பான்மையும், அன்பும், சகோதரத்துவமும் கொண்ட உண்மையான வாழ்வு வாழ முடியும்.

Wednesday, February 25, 2009

தவக்காலம்

தவம் என்றாலே ஒறுத்தல், ஒறுத்தல் என்பது தேவைக்கு அதிகமாக உள்ளதை பிறர்க்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தியாவசியமில்லாததை தவிர்த்தல். இப்படிப்பட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தும் ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இன்றைய சுயநலமிக்க அவசரமிகு உலகில் தனது தேவைகளுக்காகவும், வாழ்வுக்காகவும் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

"மண்ணாகப் பிறந்த நீ
மண்ணுக்கே திரும்புவாய்"

என்ற அருமையான பாடல் வரிகள் வாழ்வின் உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றது. நன்கு வளமிக்க மண்ணில் வளரும் பயிர்கள் செழிப்பான அறுவடையை கொடுக்கும். ஆனால் வளமில்லாத மண்ணோ ஒன்றுக்கும் உதவாது. அதனை மேம்படுத்த அதில் உரங்களை போட்டு உழுது பண்படுத்த வேண்டும். ஆம் நமது துன்பங்களை நீக்கும் வழிகளையும், நம்மை மனித நேயமிக்க மனிதனாக மாற்றவும், நம்மை புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்புகள் தேவைப்படுகின்றது. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் காலமாக இந்த தவக்காலம் அமைகின்றது.

இளைஞர்களாகிய நாமும் நம்மால் இயன்ற நற் காரியங்களையும், நமது வாழ்வு இறைவனின் பாதையில் செல்கின்றதா? என்பதனையும் பரிசீலனைக்கு உட்படுத்த இது தான் சரியான வேளை.