Sunday, April 12, 2009

அகவிருள் அகற்ற அருளொளி பிறந்தது

உயிர்ப்பு இந்த வார்த்தைக்குள் எத்தனை அர்த்தங்கள் பொதிந்துள்ளது. "காலங்கள் யாவும் அவருடையன" என்ற திரு வாக்கிற்கேற்ப கடந்து வந்த துன்ப காலங்களை நீக்கி உண்மையான, மகிழ்வான வாழ்விற்கு நம்மை அழைத்துச்செல்லும் உயிருள்ள உணவாக நமக்காக தன் இன்னுயிரையே ஈந்து உயிர்த்தார்.

தவக்கால நிகழ்வுகள்:


1. புனித வியாழன் 2&3. இரத்ததான முகாம் - புனித வெள்ளி


4. உயிர்ப்பின் தயாரிப்பில்

Sunday, March 15, 2009

தியானம்

இளையோருக்கான தியானம் இன்று இனிதே நடைபெற்றது. எதிர் பார்த்ததை விட அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்களும், இளம்பெண்களும் கலந்துகொண்டனர். "தவறுகளிலிருந்து மீள்தல்" என்ற அருமையானதொரு கருத்தை கொண்டு தியானம் நடைபெற்றது. பொதுவாக இன்றைய காலக்கட்டத்தில் தவறு செய்தவன் திருந்துவது என்பதே ஆச்சரியமானதாக இருக்கிறது. ஏனெனில் தவறுகளை சுட்டி காட்டி, நல் வழிப்படுத்த சரியான வழிகாட்டிகளை தேர்ந்தெடுக்காததும், அல்லது சரியான நபர்கள் இருந்தும் உண்மை நிலை உணராமல் அலட்சியப்படுத்துவதுமாகவே பெரும்பாலானவர்கள் வாழ்ந்து வருகின்றோம்.

இப்படிப்பட்ட வாழ்வியல் சூழலில் நம்மை புதிப்பித்துக்கொள்ள இந்த தியானம் நிச்சயம் உதவும் என்பது உறுதியே. இது போன்ற தியானங்களில் கட்டாயம் இளையோர் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நாம் வேலை பார்க்கின்றோம் எனில் ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை நம்மை அந்த வேலையில் புதுப்பித்துக்கொள்ளவும், புதிய தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ளவும் பயிற்சிக்குட்படுத்துகின்றனர்.

ஆனால் நாம் நமது சமூக மற்றும் ஆன்மீக வாழ்வில் நம்மை மேம்படுத்த எங்ஙனம் நம்மை பயிற்சிக்கு உட்படுத்துகின்றோம் என்று பார்த்தோமானால் கேள்விக்குறியே மிஞ்சும். அதனால் தான் நமது ஆன்மீக அமைப்பானது மாதமொருமுறை தியானம் மற்றும் சபை சார்ந்த செயல்பாடுகள் என ஆன்மீகத்தோடு சமூக வாழ்வின் முன்னேற்றத்துக்கும் அடித்தளம் அமைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

அப்படிப்பட்ட செயல்பாடுகளுக்குள் நம்மை உட்படுத்த நாம் தாமாகவே முன் வரவேண்டும், அதனோடு கூட பெற்றோரும் இது போன்ற தியானங்கள் மற்றும் அமைப்புகளின் செயல்பாடுகளில் கலந்துகொள்ள தங்களது குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி நடந்தால்தான் எதிர்காலத்தில் மன்னிக்கும் மனப்பான்மையும், அன்பும், சகோதரத்துவமும் கொண்ட உண்மையான வாழ்வு வாழ முடியும்.

Wednesday, February 25, 2009

தவக்காலம்

தவம் என்றாலே ஒறுத்தல், ஒறுத்தல் என்பது தேவைக்கு அதிகமாக உள்ளதை பிறர்க்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தியாவசியமில்லாததை தவிர்த்தல். இப்படிப்பட்ட சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தும் ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம். இன்றைய சுயநலமிக்க அவசரமிகு உலகில் தனது தேவைகளுக்காகவும், வாழ்வுக்காகவும் அலைந்து கொண்டிருக்கின்றோம்.

"மண்ணாகப் பிறந்த நீ
மண்ணுக்கே திரும்புவாய்"

என்ற அருமையான பாடல் வரிகள் வாழ்வின் உண்மையை அப்பட்டமாக உணர்த்துகின்றது. நன்கு வளமிக்க மண்ணில் வளரும் பயிர்கள் செழிப்பான அறுவடையை கொடுக்கும். ஆனால் வளமில்லாத மண்ணோ ஒன்றுக்கும் உதவாது. அதனை மேம்படுத்த அதில் உரங்களை போட்டு உழுது பண்படுத்த வேண்டும். ஆம் நமது துன்பங்களை நீக்கும் வழிகளையும், நம்மை மனித நேயமிக்க மனிதனாக மாற்றவும், நம்மை புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்புகள் தேவைப்படுகின்றது. அந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் காலமாக இந்த தவக்காலம் அமைகின்றது.

இளைஞர்களாகிய நாமும் நம்மால் இயன்ற நற் காரியங்களையும், நமது வாழ்வு இறைவனின் பாதையில் செல்கின்றதா? என்பதனையும் பரிசீலனைக்கு உட்படுத்த இது தான் சரியான வேளை.

Monday, February 9, 2009

திருத்தந்தையின் மனக்கவலை

கடந்த பல மாதங்களாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியின் வாயிலாகவும் கேட்டும், உணர்ந்தும் மனக்கவலைப்பட்ட நிகழ்வு ஒன்று உண்டென்றால்; அது ஈழத்தமிழர்களின் வாழ்க்கைச்சூழல் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க இயலாது. இலங்கையில் பாதிக்கப்படுபவர்களை சக தமிழன் என்று நாம் எண்ணி கவலை கொண்டாலும்; பிறருக்கும், இந்த உலகுக்கும் அவர்களை மனித குலத்தைச் சார்ந்த ஒரு கூட்டம் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து கவலை கொண்டு, பாதிக்கப்படுபவர்களுக்கு பாரபட்ச்சமின்றி உதவ கட்டாய கடமை உள்ளது.

"ஒருவன் தன் மொழி சார்ந்து, தனது பாரம்பரியத்தோடு வாழும்போதுதான் மனித வாழ்வு மேன்மையடைகிறது." என்ற கருத்தில் தான்; தமிழ்த் தொண்டாற்றி இறை அருள் பெற்றுத்தந்து மனிதருள் புனிதரானார் புனித வீரமாமுனிவர். அத்தகையதொரு கலாசாரத்தின் பிரதிபலிப்போடு ஆண்டவர் இயேசு கிறித்துவின் அருளைப்பெற்று வரும் நமக்கு, அவர்களின் துன்பங்களையும், துயரங்களையும் அது மனம் உணர்ந்து கொள்வதில் வியப்பேதுமில்லை.

ஈழத்தில் பாதிக்கப்படும் மக்கள் குறித்து பல மாதங்களாக தனது கவலைகளை தெரிவித்து அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடி வரும் திருத்தந்தை அவர்கள், கடந்த வாரத்தில் இலங்கையில் பாதிக்கப்படும் மக்களின் நிலை அறிந்து கொள்ள வத்திக்கான் தூதுவர் அதி.வண.மரியா செனாரி ஆண்டகை அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கே வாடும் தமிழர்களுக்காக நமது கத்தோலிக்க கிறித்தவர்கள் 08/02/09 ஞாயிறு அன்று தமிழகமெங்கும் மௌன ஆர்ப்பாட்டம் நடத்தி தமது சமூக அக்கறையையும், மனக் குமுறலையும் வெளிப்படுத்தினர்.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மயிலை மறை மாவட்ட பேராயர் ஏ.எம்.சின்னப்பா தெரிவித்துள்ளதாவது:

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடைபெறும் போரில் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு ஆழ்ந்த வேதனையையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறோம்.

இராணுவம் தமிழ் மக்கள் வசிக்கும் பாதுகாப்பு பகுதிகளிலும், மருத்துவமனை, தேவாலயம் ஆகியவற்றின் மீதும் குண்டுகள் வீசுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் கூறியும் அரச தலைவர் ராஜபக்சவும் மற்றவர்களும் கேட்கவில்லை.

சிறு குழந்தைகள், பெண்கள், வியாதி வந்தவர்கள் என நூற்றுக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்பதை ஒரு சாக்காக வைத்து தமிழ் மக்களை அழிக்க நினைக்கின்றனர். அங்கு தமிழ் மக்கள் உரிமையோடும், மனித மாண்போடும் வாழ போர் நிறுத்தம் செய்து அரசியல் ரீதியான தீர்வு கண்டால் மட்டும் போதாது. தமிழர்களுக்கு தனிப்பட்ட இடம் கொடுக்க வேண்டும்.

தனி ஈழம் அமைந்தால்தான் தமிழர்களை காப்பாற்ற முடியும்.

மிகச்சிறிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்காக ஒரு சிறு பகுதியை ஒதுக்கி கொடுத்துள்ளது. இதனால் இலங்கையில் மக்களின் தனித்தன்மை, தேவைக்கு ஏற்ப தமிழீழம் கொடுக்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்திய அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் சீராக கிடைத்திட ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.

Tuesday, January 27, 2009

சுற்றுலா

பொதுவாகவே சுற்றுலா என்றவுடன் மனம் தன்னாலே துள்ளிகுதிக்க ஆரம்பித்துவிடும். ஏனெனில் சுற்றுலா மனதிற்கு ஒரு மலர்ச்சியும் புதிய எண்ணங்களையும் தரக்கூடிய ஒன்று. அரசாட்சிக் காலத்திலும் சரி, முடியாட்சிக் காலத்திலும் சரி ஆட்சியாளர்களும், ஏன் அடித்தட்டு மக்களும் தங்களை புதிப்பித்துக்கொள்ள பயணங்கள் ஒரு இனிய வாய்ப்பாகவே அமைந்து வந்திருக்கிறது. திரை கடல் ஓடி திரவியம் தேடு என்பது தமிழ் மூதாட்டியின் சிறப்பானதொரு அறிவுரை. திரை கடல் ஓடாவிட்டாலும், புதியதொரு சுற்றுச்சூழல், பழக்கவழக்கங்களை உரிய மற்றுமொரு இடத்திற்கு செல்வது கூட புதிய அனுபவத்தை தரக்கூடிய ஒன்று.

அப்படிப்பட்ட சுற்றுலாவிற்கு குழந்தை இயேசு இளையோர் இயக்கத்தினராகிய நாங்களும் சென்று வந்துள்ளோம். ஆம் தமிழ் மண்ணின் மலர்ச்சிமிகு பசுமை பூமியான கொடைக்கானலுக்கு சென்றோம். பசுமையின் அழகினை இரசித்த அதே வேளையில் இறைவனின் அருளையும் பெற தவறவில்லை. மதிய வேளையில், நீண்ட நாட்களாக நிலவி வந்த பணிமூட்டமிகு சூழல் திங்கட்கிழமையான இன்று இல்லாமைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி திருப்பலியில் அனைவரும் பங்கு கொண்டோம். திருப்பலி நிறைவேறிய பின்னர், முன் தினம் இளையோரே சமைத்த சுவைமிகு உணவை உண்டோம்.


மாலை ஆறு மணியளவில், அனைவரும் ஊருக்கு திரும்ப ஆயாத்தமாகிய தருணத்தில் அதுவரை வெளி வராத பனி மூட்டம் வந்தது, எங்களை வாழ்த்தி வழி அனுப்புவதாக அமைந்தது.


படங்கள்: